--- --:--:-- --

ஊரடங்கால் தொழில்கள் பாதிப்பு : வங்கிகளில் தாராளமாக கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!!

12

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கியது. உற்பத்தி, விற்பனை, சேவை என அனைத்து துறைகளும் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவடையும் சூழல் உருவானது. தொழில் முடக்கத்தால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் உருவானது.

 

இதனால், ஊரடங்கு அமலான 2 நாட்களில் கடந்த மார்ச் 27-ந் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், நாட்டின் நிதி நிலைமை, பொருளாதார நிலைமை குறித்து விளக்கம் அளித்ததுடன், சில சலுகைகளையும் அறிவித்தார். வங்கிக் கடன்களுக்கான மாதாந்திர தவணைகளை 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என வங்கிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் சிறிது குறைக்கப்பட்டது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 3 மாதங்களுக்கான பி.எப். தொகையை அரசே செலுத்தும் என்ற அறிவிப்பையும் சக்தி காந்த தாஸ் வெளியிட்டார்.

 

ஆனால் வங்கிகளுக்கான மாதாந்திர தொகையை செலுத்துவதில் 3 மாதங்களுக்கு விலக்கு என்ற அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில், 3 மாத தவணையை செலுத்தாவிட்டால் பின்வரும் காலங்களில் வட்டியுடன் சேர்த்து பல மடங்கு கட்ட வேண்டியிருக்கும் என வங்கிகள் கூறியதால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

 

இந்நிலையில், ஊரடங்கு காலம் 2-வது முறையாக மேலும் 19 நாட்களுக்கு நீடிக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், நாட்டின் பொருளாதார நிலை குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது சில சலுகைகளையும் அவர் அறிவித்தார். செய்தியாளர்களிடம் சக்தி காந்த தாஸ் கூறியதன் சாராம்சங்கள் இதுதான் :

 

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.நாடு முழுவதும் வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது; இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன.நாடு முழுவதும் 91 சதவீத ஏடிஎம் மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.கொரோனாவால் மிகப்பெரிய பொருளாதார சவால் காத்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நிலைமையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.

 

இணைய பயன்பாடு, ஆன்லைன் பரிவர்த்தனையில் எந்த பிரச்னையும் இல்லை. 476.5 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. நாட்டில் பணப்புழக்கம் இராக உள்ளது. பிப்ரவரி 16 முதல் மார்ச் 27 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவிகிதம் அளவுக்கு பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது, அடுத்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.4 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜி20 நாடுகளில் இந்தியாவில் மட்டுமே வளர்ச்சி விகிதம் கூடுதலாக இருக்கும்.

 

கொரோனா தொற்றால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு தானியங்களான அரிசி, கோதுமை, பயறு வகைகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன.பணப்புழக்கத்தை அதிகரிக்க, நிதிச்சுமையை குறைக்க பல்வேறு அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். ரூ.50 ஆயிரம் கோடிக்கு வங்கிகளிடம் இருந்து கடன் பத்திரங்கள் பெறப்படும்.

 

மேலும், வங்கிகளில் தாராளமாக கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக நபார்டு, சிட்பி உள்ளிட்ட வங்கிகளின் மூலமாக ரூ.50 ஆயிரம் கோடிக்கு கடன் உதவி வழங்க வழி செய்யப்பட்டுள்ளது.கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4% ல் இருந்து 3.75 சதவீதமாக குறைக்கப் படுகிறது எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon