--- --:--:-- --

பள்ளிகளை இழுத்து மூடுங்க! ராமதாஸின் ஆவேசத்துக்கு காரணம் இதுதான்!

Ramados 02

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், 12 ஆம் வகுப்பு தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று அனைத்துத் தரப்பினரும் நிம்மதி பெருமூச்சு விட்டு வந்த நிலையில், மீண்டும் மிக வேகமாக பரவத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 

பொருளாதார நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், அதை கொரோனா பரவல் ஓய்ந்து விட்டதாகக் கருதிக் கொண்டு பொதுமக்கள் அலட்சியமாக நடந்து கொண்டது தான் இந்த நிலைக்கு காரணமாகும். முகக்கவசம் அணிவது, கையுறைகளை அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கடைபிடிப்பதில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் உண்மையாகும்.

 

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வீசுவதை தடுக்க முடியாது என மருத்துவ வல்லுனர்கள் கூறியிருப்பதைக் கருத்தில் கொண்டு மக்கள் அக்கறையுடனும், பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும். கொரோனா வைரஸ் பரவல் இன்னும் ஓயவில்லை; நாம் பாதுகாப்பு விதிகளை மதித்து செயல்படா விட்டால் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீசும்.

 

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூலமாகத் தான் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரவுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களின் பெற்றோர்களில் 5 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களில் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங்கள் மூலம் நோய்ப்பரவும் சூழலில் அவற்றை தற்காலிகமாக மூடுவது தான் சரியானதாக இருக்கும்.

 

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு தவிர்த்து மீதமுள்ள அனைத்து வகுப்புகளின் மாணவர்களும் தேர்ச்சி பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 9, 10, 11 ஆகிய வகுப்புகளின் மாணவர்களுக்கு பள்ளிகளை நடத்துவது தேவையற்றதாகும். எனவே, 12 ஆம் வகுப்பு தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon