வேகமாக பரவும் கொரோனா… ஓட்டல்கள், தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு! அரசு போட்ட அதிரடி உத்தரவு!!
மீண்டும் வேகமாக கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், ஓட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் திரையரங்குகளுக்கு புதிய விதிமுறைகளை வகுத்து, மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஓரளவு கட்டுப்பாட்டுடன் இருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகி வருகிறது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பை நகரில் நேற்று ஒரே நாளில் 1,712 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.
கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், மகாராஷ்டிராவில் திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளிட்டவற்றில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. திரையரங்குகள், ஓட்டல்கள் 50 சதவீத அளவுக்கு இடங்களை நிரப்பி கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டு உள்ளதோடு, திருமண சடங்குகளுக்கு 50 பேர், இறுதி சடங்குகளுக்கு 20 பேர் அனுமதிக்கப்படுவர். சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பணிகளை தவிர பிற அனைத்து அலுவலகங்களிலும் 50 சதவீதம் அளவுக்கே ஊழியர்கள் பணியாற்ற அனுமதி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவுரங்காபாத் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்துவது என்று அரசு முடிவு செய்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. நாக்பூர் மாவட்டத்தில் ஒருவார ஊரடங்கு உத்தரவு நேற்று அமலானது. எனினும், அத்தியாவசிய சேவைகளான பால் பூத், காய்கறி, பழம் மற்றும் மருந்து கடைகள் போன்றவை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எனினும், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள், கடைகளை மூடும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வீடுகளை விட்டு வெளியே வர பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. சாலைகள் வெறிச்சோடி உள்ளன.
இதேபோல், குஜராத் மாநிலத்தில் அவுரங்காபாத் உள்ளிட்ட 4 நகரங்களில் இரவுநேர ஊரடங்கு உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.





