--- --:--:-- --

உயர்நீதிமன்ற தடை எதிரொலி..! சட்டப்பேரவை முற்றுகையின்றி நிறைவடைந்த போராட்டம்..! போலீஸ் நிம்மதி!!

jj

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்காக பேரணியாக சென்ற இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர், உயர் நீதிமன்ற தடை காரணமாக முற்றுகையை கைவிட்டு ஆர்ப்பாட்டத்துடன் போராட்டத்தை முடித்து அமைதியாக கலைந்தனர். இதனால் பதற்றம், பரபரப்பின்றி போராட்டம் முடிவடைந்ததால், போலீசார் நிம்மதியடைந்தனர்.

 

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது போல், தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆளும் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்ற மறுப்பதால், சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப் போவதாக இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

 

ஆனால், இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று மாலை திடீரென தடை விதித்தது. அடுத்த மாதம் 11-ந் தேதி வரை தலைமைச் செயலக வளாகத்தை சுற்றியுள்ள போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றம் விதித்த தடை தங்களை கட்டுப்படுத்தாது என்றும், திட்டமிட்டபடி இன்று சட்டப் பேரவை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

 

அமைதி வழியில், தேசியக் கொடியை ஏந்திய படி பேரணியாகச் சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என்றும் இதில் பல்வேறு கட்சித் தலைவர்களும், அனைத்து சமுதாய தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டதால், நேற்று இரவு முதலே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரக் கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து பேரணி புறப்பட்டது. ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக் கணக்கானோர் கைகளில் தேசியக் கொடி ஏந்தியபடி, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான முழக்கங்களுடன் பேரணியில் சென்றனர். இந்தப் பேரணியில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். சேப்பாக்கம் வழியாக சட்டசபை நோக்கி செல்ல திட்டமிட்டிருந்த பேரணியை சட்டசபைக்கு வெகு தொலைவில் சேப்பாக்கத்திலேயே நிறைவு செய்தனர்.

சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்ததால் முற்றுகையை கைவிடுவதாக அறிவித்து, சிஏஏ-க்கு ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் சிறிது நேரம் பேசியவுடன் சிஏஏக்கு எதிராக முழக்கம் எழுப்பியவுடன் போராட்டம் நிறைவு பெறுவதாக அறிவித்தனர்.

 

இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்றோர் அமைதியாக கலைந்து சென்றனர். எந்தவித பதற்றமோ, அசம்பாவிதங்களோ, கைது நடவடிக்கைகளோ இன்றி போராட்டம் நிறைவடைய போலீசாரும் நிம்மதி அடைந்தனர்.

 

சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு ஏராளமானோர் திரண்டனர்.சென்னையைப் போல், மற்ற மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்துடன் போராட்டம் நிறைவு பெற்றது.

Leave a Reply

Right Menu Icon