7 மாத கர்ப்பிணியாக இருந்த கைதி மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்..!
வேலூரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணி கைதி தப்பி ஓடினார். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிபட்டு என்ற கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி இரண்டாவது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கொன்றதாக காவலர்களால் தேடப்பட்டு வந்தார்.
இரண்டாவது காதலன் அஜித்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் பல மாதங்களாக தலைமறைவான கிருஷ்ணவேணி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வேறொரு நபருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தது காவலர்களுக்கு தெரியவந்தது. 7 மாத கர்ப்பிணியாக இருந்த கிருஷ்ணவேணி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு 3 நாட்களுக்கு முன்பாக அவர் அழைத்து செல்லப்பட்டார். கர்ப்பிணிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணவேணி உடைகளை மாற்றிக்கொண்டு மற்றொரு பெண்ணிடம் வாங்கிய புடவையைக் கட்டிக்கொண்டு மருத்துவமனையில இருந்து தப்பி ஓடிவிட்டார்.
3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கிருஷ்ணவேணி தேடப்பட்டு வருகிறார்.







