சிங்க பெண்களுக்கு வாழ்த்து பிரதமர் நரேந்திரமோடி
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது சமூக வலைதள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை சாதனை பெண்மணிகள் 7 பேரிடம் ஒப்படைத்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிரை கௌரவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சினேகா மோகன்தாஸ் இடம்பிடித்துள்ளார். பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்கும் உணவு வங்கி நடத்திவரும் இவர் பிரதமரின் கவனத்தை ஈர்த்துள்ளார். சிறுவயதில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி இரண்டு கைகளையும் இழந்த கும்பகோணம் மாளவிகா ஐயர் என்பவரும் அதில் இடம்பெற்றுள்ளார்.
தன்னம்பிக்கையுடன் படித்து பிஎச்டி பட்டம் பெற்ற அனுபவத்தை மாளவிகா ஐயர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இவர்களைத் தவிர காஷ்மீர் கைவினை கலைஞர் ஆரிபா, மகாராஷ்டிராவின் பஞ்சாரா சமூகத்தின் பாரம்பரிய கைவினை கலைஞர் விஜய பவார், தண்ணீர் சிக்கனம் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த ஆய்வாளர் கல்பனா ரமேஷ், கான்பூர் கட்டிட தொழிலாளி காலாவதி தேவி, பீகார் காளான் வளர்ப்பு தொழில் ஆர்வலர் வீணா தேவி ஆகியோர் பிரதமரின் சிங்க பெண்கள் பட்டியலில் இடம்பிடித்து நெகிழ்ச்சியுடன் வீடியோ பதிவிட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




