கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் மோடி இன்று வழிபாடு
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு பிரதமர் மோடி இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்கினார். அதைத்தொடர்ந்து இன்று காலை 8.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 9.30 மணியளவில் அரிச்சல்முனை கடலில் புனித நீராடுகிறார். அதன் தொடர்ச்சியாக கடல்கரை மணலில் சிவலிங்கம் உருவாக்கி சிறப்பு பூஜை மற்றும் சங்கல்பம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து காலை 10.25 மணிக்கு தனுஷ்கோடியில் உள்ள கோதண்ட ராமர் கோயிலுக்கு வருகை தரும் பிரதமர், அங்கு காலை 11 மணி வரை சாமி தரிசனம் செய்கிறார். ராமாயணத்தில் விபிஷணருக்கு இலங்கை அரசராக ராமர் பட்டாபிஷேகம் செய்து வைத்த இடம் தனுஷ்கோடி என நம்பப்படுகிறது.
அயோத்திக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள பந்தத்தை குறிக்கும் வகையில் பிரதமர் மோடி கோதண்ட ராமர் கோயில் வழிபாடு மேற்கொள்கிறார்.பிரதமர் வருகையையொட்டி அரிச்சல்முனை, தனுஷ்கோடியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் வந்தடையும் பிரதமர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அதன் பின்னர் மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் டெல்லி செல்கிறார்.





