திமுக இளைஞரணி மாநாடு தொடங்கியது..!
சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாநாட்டு திடல் முன்பாக அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி 100 அடி உயர கம்பத்தில் கழக கொடியை ஏற்றி வைத்தார்.இந்தியச் சமூகத்தின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்க வேண்டுமென்ற ஜனநாயகத் தேவையை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, அண்மைக் காலங் களில், நிதி ஆதாரப் பங்கீட்டில் சில தென்னிந்திய மாநிலங்கள் தங்களுக்குக் கூடுதல் விகிதம் அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இன்றைய மாநாட்டின் மூலம் அகில இந்திய அளவில் இக்கோரிக்கைக்குப் போதிய ஆதரவு கிட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து வாழ்த்தியுள்ள கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலைனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 1980-ம் ஆண்டு மதுரை ‘ஜான்சி ராணி பூங்கா’வில் நடைபெற்ற மாநாடு மு.க ஸ்டாலினுக்கு முழு அரசியல் பயணத்தைக் கொடுத்ததாக பார்க்கப்படுகிறது.
அதுபோல, இந்த மாநாடும் திமுக அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை, உறுப்பினர் சேர்ப்பு – திரட்டலில் புதிய வடிவங்களை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





