--- --:--:-- --

திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள 6 அரசு பள்ளிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி மனு!

2

திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள 6 அரசு பள்ளிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி தலைமையாசிரியர்கள் தலைவரிடம் கோரிக்கை மனு..!

 

திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் உள்ள அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, தேவராயன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, ராக்கியாபாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி, திருமுருகன்பூண்டி நகராட்சி தொடக்கப்பள்ளி, அணைப்புதூர் நகராட்சி தொடக்கப்பள்ளி, உமையஞ்செட்டிபாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் நா.குமார், நகராட்சி கமிஷனர் கனிராஜ் ஆகியோரை சந்தித்து தங்கள் பள்ளிகளுக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தனித்தனியாக மனு கொடுத்தனர்.

 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள 6 பள்ளிகளிலும் 10 தூய்மை பணியாளர்கள், 6 இரவு காவலர்கள் பணி அமர்த்த வேண்டும். மேற்காணும் பணியாளர்கள் பள்ளியிலேயே தொடர்ந்து நாள் முழுவதும் இருக்கும் வகையிலும், பள்ளியின் கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்யும் வகையிலும் நியமனம் செய்ய வேண்டும்.

 

அதேபோல் இரவு காவலர்கள் இரவு நேரத்தில் பள்ளியில் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும். மேலும், பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் உள்ள வகுப்பறை கதவுகளுக்கு கிரில் கேட்டு அமைத்து தர வேண்டும்.  அம்மாபாளையம் பள்ளியில் மாணவிகளுக்கு என தனியாக கழிப்பிடம் உடனடியாக கட்டி தரவேண்டும்.

 

தற்போது உள்ள பள்ளி சுற்றுச்சுவர் பழுதடைந்து இருப்பதால் அதை இடித்து புதிய சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் அமரும் தரையில் டைல்ஸ் ஒட்டி தர வேண்டும். மாணவிகளின் கழிப்பறைகளில் மாதவிடாய் கால அணையாடையை எரிக்கும் எரியூட்டி வைத்துத் தர வேண்டும்.

 

வகுப்பறைகளில் வண்ண படங்கள் வரைந்து தருதல், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி தருவதுடன், புதிய குடிநீர் இணைப்பு கொடுத்து அதனை சேகரிக்க கீழ்நிலை தொட்டி அமைத்து தரவேண்டும்.
அதேபோல் கை கழுவும் வசதியுடன் புதிய சின்டெக்ஸ் அமைத்து சுத்திகரிப்பு குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும்.

 

வகுப்பறைகளுக்கு இடையே தடுப்பு சுவர் அமைத்து தருவதுடன், பள்ளியின் மேற்கூரைகள் உள்பட பழுதான பள்ளி கட்டிடங்களை பழுது பார்த்து தர வேண்டும். 3 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள வகுப்பறைகளில் பெஞ்சு மற்றும் டெஸ்க்குகள் அமைத்தும், 1 மற்றும் 2 வகுப்புகளுக்கு சிறிய அளவிலான பெஞ்சு மற்றும் டெஸ்க்குகள் ஏற்பாடு செய்யவேண்டும். மேலும் இத்தேவைகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் நிறைவேற்றி தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

மனுவை பெற்ற நகராட்சி தலைவர் நா.குமார் கூறியதாவது: நகராட்சி கமிஷனர் கனிராஜ், பொறியாளர் நக்கீரன் ஆகியோருடன் இதுகுறித்து ஆலோசித்து தமிழக கல்வித்துறை அமைச்சரை சந்தித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

 

நிகழ்ச்சியில் அம்மாபாளையம் பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், திருமுருகன்பூண்டி பள்ளி தலைமையாசிரியை லீலாவதி, ராக்கியாபாளையம் பள்ளி தலைமையாசிரியை உமா மகேஸ்வரி, அணைபுதூர் பள்ளி தலைமையாசிரியை வசந்தி,
தேவராயம்பாளையம் பள்ளி தலைமையாசிரியை நிர்மலா,
உமையஞ்செட்டிபாளையம் பள்ளி தலைமையாசிரியர் ராமசாமி ஆகியோர் மனு கொடுத்தனர்

Right Menu Icon