--- --:--:-- --

தேர்தல் முடிந்ததும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு..!

10

மிழகத்தில் நீர்நிலைகளை விழுங்கி வரும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன் மாநிலம் தழுவிய அளவில் இப்பணிகளை ஒருங்கிணைக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘மாவட்ட வருவாய் அலுவலர்’ (டி.ஆர்.ஓ) அளவிலான அதிகாரிகளை நியமிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தின் நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றக் கோரி, கடந்த 2015-ஆம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

 

விசாரணையின் போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் புதிய பணிகளை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகவும், தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் மரம் அகற்றும் பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என்றும் உறுதி அளித்தார்.

 

அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். மேலும், தேர்தல் முடிந்தவுடன் மாநிலம் முழுவதும் இப்பணிகளைத் தடையின்றி மேற்கொள்ள மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். குறிப்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) அந்தஸ்திலான அதிகாரிகளை இதற்கென பிரத்யேகமாக நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

 

 

ஏற்கனவே இப்பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள், இந்த மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணிகளைச் சீரமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் மாதம் 5-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மாநில அரசின் இந்த புதிய முன்னெடுப்பு, நிலத்தடி நீர் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon