தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் – இடதுசாரி கட்சிகளுக்கு அழைப்பு
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சென்னையை அடுத்த கோவளத்தில் நாளை முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் கூட்டணிக் கட்சிகளுடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவர்களை அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடதுசாரி கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், த.வெ.க. தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டுவது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





