கொலைவெறி தாக்குதல்..தொண்டி அருகே கிராம நிர்வாக உதவியாளருக்கு நேர்ந்த கொடூரம்.. கொலைகார கும்பலை சுளுக்கு எடுக்குமா போலீஸ்?
தொண்டி அருகே கிராம நிர்வாக உதவியாளர் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்கி உள்ளது. கொலைகார கும்பலை கைது செய்து, காவல்துறையினர் மாவுக்கட்டு போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் வசித்து வருபவர் காளிதாஸ் மகன் சுதாகர் (35). புதுப்பட்டினம் கிராம நிர்வாக உதவியாளராக உள்ளார். இவர், வழக்கம் போல் வேலைக்கு நேற்று 26 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில்,சுதாகர் சென்றுள்ளார்.
வீரசங்கிலிமடம் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சுதாகரை 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்துள்ளது. எந்த கேள்வியும் கேட்காமல் திடீரென சுதாகரை கடுமையாக கட்டையால் தாக்கி உள்ளனர். அவரது செல்போனை அடித்து நொறுக்கி உள்ளனர்.
ஆறு பேரின் கடுமையான தாக்குதலில் இருந்து தப்பிக்க அருகில் இருந்த பண்ணைக்குள் கிராம நிர்வாக உதவியாளர் சுதாகர் ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால், விடாமல் துரத்தி வந்த கும்பல் அங்கு சுதாகரை சுற்றி வளைத்துக் கொண்டு சரமாரியாக தாக்கி உள்ளது.
இந்த தாக்குதலை கருப்பையா மகன் நல்லசிவம், பொன்ராசு மகன் மாரியப்பன், முத்து, ராசு மகன் பொன்னையா உள்பட 3 பேர் இந்த கொடூரத்தை நிகழ்த்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான சுதாகர் தரப்பில் வட்டாட்சியரிடம் இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 6 பேர் கும்பலின் கொலைவெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த சுதாகரை, திருவாடானை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டா மாறுதல் தொடர்பான முன்விரோதத்தில் சுதாகர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. தனது உறவினர் ஒருவருக்கு, பட்டா மாறுதல் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதன் பின்னணியில் சுதாகர் இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது.
பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஆளும் திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது.
இது மக்களுக்கு பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டம் முன்பு நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கையில் அரிவாள் எடுத்து சட்டத்தை மீறும் நபர்களுக்கு காவல்துறை மாவுக்கட்டு போட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தனி மனிதர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். மக்களின் அச்சத்தை போக்க, காவல்துறை உடனடியாக களமிறங்க வேண்டும். அதை காவல் துறை நிச்சயம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.





