--- --:--:-- --

3 மாத குழந்தைக்கு பாலில் விஷம் வைத்து கொன்ற தாய்..! உடற்கூறு ஆய்வு முடிவில் அதிர்ச்சி..!

3

விழுப்புரம் பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாட்சா. தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார் ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தார். இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி யாஸ்மினுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

 

ஆலயா பானு என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி இரவு தான் யாஸ்மீன் பால் கொடுத்து தூங்க வைத்த நிலையில் மறுநாள் காலை குழந்தை இறந்துள்ளது.

 

அந்த குழந்தையை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

நன்றாக இருந்த குழந்தை இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத குழந்தையின் தந்தை சாதிக் பாட்சா தனது குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த குழந்தையின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வு பரிசோதனை முடிவுகள் ஒரு மாதம் கழித்து வியாழக்கிழமை வெளியானது. உயிரிழப்பதற்கு முந்தைய நாள் இரவில் குழந்தை குடித்த பாலில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்ததையடுத்து.

 

குழந்தையின் பெற்றோரை அழைத்து மேற்கு காவல் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கனவே ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில் கொரொனா ஊரடங்கால் பேருந்து வேலை இல்லாமல் கணவர் வேலை இழந்து வருமானமின்றி தவித்த சூழலில் மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தையை எப்படி வளர்த்து கரை சேர்க்கப் போகிறோம் என்று எண்ணி பாலில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து தனது பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

 

இதனையடுத்து குழந்தையின் மர்ம மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாயாரை கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். வறுமையின் காரணமாக பெற்ற குழந்தையை வளர்க்க இயலாதவர்கள் தமிழக அரசின் சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் தொட்டில் குழந்தை திட்டத்தில் தங்கள் குழந்தையைக் கொண்டு சேர்த்து இருக்கலாம் அல்லது குழந்தை இல்லாமல் ஏங்கி தவிக்கும் ஏதாவது தம்பதிக்கு சட்டப்படி தத்து கொடுத்து இருக்கலாம்.

 

அதை விடுத்து பாலில் விஷம் கலந்து கொள்வது பெண் சிசுவுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் நிகழ்வுக்கு சமமான கொடுமை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Leave a Reply

Right Menu Icon