5 ஆம் கட்ட பொது முடக்கம் தொடர்பாக மன் கி பாத் நிகழ்ச்சியில் அறிவிக்கிறாரா மோடி?
கொரொனா தொற்று எண்ணிக்கை இதுவரை கட்டுக்குள் வராமல் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் நான்காவது கட்ட பொது முடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த பொது ஊடகம் ஐந்தாம் கட்டமாக நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
முதல் மூன்று கட்ட பொது முடக்க உத்தரவின் அம்சங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாண்டு வந்த நிலையில் நான்காம் கட்ட பொது முடக்கத்தின் போது பல அதிகாரங்கள் மாநிலங்கள் வசம் விடப்பட்டன. கடைகள் திறப்பது, தொழிற்சாலைகளை திறப்பது போன்றவற்றை மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தற்போது இந்த நான்காம் கட்ட பொது முடக்க முடிவுதான் ஐந்தாம் கட்ட போதும் நீடிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐந்தாம் கட்டத்திலும் பொது முடக்க தளர்வுகள் பற்றி மாநில அரசுகளை முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்படும் என தெரிகிறது. மின்சார ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்டவற்றை மீண்டும் இயக்க வேண்டும் என டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இதுதொடர்பான அறிவிப்பு வர வாய்ப்புள்ளது. அதேபோல், திரையரங்குகள் வணிக வளாகங்களை திறப்பது பற்றி மாநில அரசுகளே முடிவு எடுக்க மத்திய அரசு அனுமதிக்கும் என சொல்லப்படுகிறது. அதே நேரம் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி , கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறக்க இந்த முறையும் அனுமதி இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் இந்த முறை பொது முடக்க உத்தரவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுவது தொடர்பான அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 31 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.






