என்னை கொல்ல முயற்சி நடந்தது! முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் புகார்
நந்திகிராமில் பிரசாரத்திற்காக சென்றபோது, தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
மொத்தம் 294 தொகுதிகள் உள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. .
இதில், மேற்குவங்க முதல்வரான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அண்மையில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி களமிறங்குகிறார்.
இதற்கிடையே, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார். ஹல்டியா என்ற பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், மனுவை மம்தா தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக, நந்திகிராமில் உள்ள சிவன் கோவிலில் அவர் வழிபாடு செய்தார்.
இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளதாக, பரபரப்பான தகவலை அவர் வெளியிட்டுள்ளார். நந்திகிராமில் இருந்த போது, மம்தா பானர்ஜியின் காரை வழிமறித்து மர்ம நபர்கள் கொலை முயற்சித் தாக்குதல் நடத்தியதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். தனது காரில் ஏற முயன்றபோது நான்கு அல்லது ஐந்து பேர் தன்னை தாக்கி, தள்ளியதாக கூறியுள்ளார்.
இதில், தனது காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், இது திட்டமிடப்பட்ட ஒரு சதி என்று கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வராக உள்ள ஒருவரே, தாக்கப்பட்டதாகக்கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





