--- --:--:-- --

கூகுள் நிறுவனத்திற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடிய இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி..!

4

டந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், கூகுள் இந்தியா மற்றும் இரண்டு இலங்கை செய்தி இணையதளங்களுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் மார்ச் 5-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

 

இந்த வழக்கின் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், மனுதாரர் இந்திய குடிமகன் அல்ல, அவர் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆவார். தன்னைப்பற்றி இணையத்தில் இருக்கும் அவதூறான கட்டுரைகளை நீக்கக் கோரி, தனது தனிப்பட்ட ரகசிய காப்பு உரிமை மற்றும் ‘தகவல் நீக்க உரிமை’ (Right to be forgotten) ஆகியவற்றை முன்வைத்து அவர் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

 

இலங்கையை விடுத்து பெங்களூரை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்? கூகுளின் இந்தியத் தலைமையகம் பெங்களூரில் உள்ளது (இலங்கையில் கூகுள் அலுவலகம் இல்லை). மேலும், இலங்கையின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதால், அவர் தனது சொந்த நாட்டிலேயே வழக்குத் தொடர்வது முறையற்றதாக இருக்கும் என்பதே அவரது காரணம்.

 

அவரது மனுவின் படி, இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்பதற்கு முன், நீதிபதி நவாஸ் இலங்கை தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் துணை சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் அவர் அளித்த சில சட்ட ஆலோசனைகள் காரணமாக, அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் அவர் மீது “தீய எண்ணம் கொண்ட மற்றும் முற்றிலும் நியாயமற்ற பிரச்சாரங்கள்” மேற்கொள்ளப்பட்டு, அதன் உச்சமாக அவர் மீது ஒரு குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

அந்த வழக்கு பின்னர் இலங்கை உச்ச நீதிமன்றத்தால் “முற்றிலும் ரத்து செய்யப்பட்டது” என்றும், அதன் பின்னரே அவர் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் உயர்ந்தார் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இருப்பினும், அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட பிறகும், கொழும்பு டெலிகிராப் மற்றும் லங்கா ஈ நியூஸ் ஆகிய இலங்கை செய்தி இணையதளங்கள் 2015 மற்றும் 2020-ல் வெளியிட்ட நான்கு கட்டுரைகள் கூகுள் தேடலில் இன்னும் வந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் அவரை ஊழல்வாதி என்றும் மோசடி செய்பவர் என்றும் குற்றம் சாட்டுகின்றன.

 

தொடர்ச்சியாக இந்தக் கட்டுரைகள் இணையத்தில் இருப்பது தனக்கு எதிரான ஒரு நிரந்தர ஊடக விசாரணையாக மாறி, உலக அளவில் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நற்பெயருக்கு ஈடுகட்ட முடியாத பாதிப்பை ஏற்படுத்துவதாக நீதிபதி நவாஸ் வாதிடுகிறார்.

Right Menu Icon