--- --:--:-- --

கர்நாடகா இடைத்தேர்தல் :15 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது – எடியூரப்பா அரசு தப்புமா..?

fh

கர்நாடகாவில் கடந்த 6-ந் தேதி மினி பொதுத் தேர்தல் போல் 15 தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கியது. குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை தக்க வைக்க முடியும் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடகாவில் ஓராண்டு ஆட்சியில் இருந்த குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த ஜுலை மாதம் கவிழ்ந்தது.இந்த இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள், பாஜகவின் வலையில் விழுந்து ராஜினாமா செய்ததால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது.

 

ராஜினாமா செய்த எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்த நிலையில், காலியாக இருந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதில் ராஜினாமா செய்து கட்சி மாறி வந்த எம்எல்ஏக்கள் 14 பேர் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.குமாரசாமி அரசு பதவியிழந்தவுடன் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியும் முறிந்ததால் இரு கட்சிகளும் இந்த இடைத் தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டன. இதனால் இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்ட நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

 

224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், 2 இடங்கள் தற்போது காலியாக உள்ளன. எனவே ஆளும் பாஜகவுக்கு தற்போது 106 உறுப்பினர்கள் பலம் மட்டுமே உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க குறைந்த பட்சம் 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் எடியூரப்பா அரசு கவிழும் அபாயம் உள்ளதால், இந்த இடைத் தேர்தல் முடிவுகள் கர்நாடக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon