--- --:--:-- --

கனிமொழி சோமு கருத்துக்கு வானதி சொன்ன பதில்!

01

திமுக – பாஜக கூட்டணி அமைக்க இருக்கிறதா எனும் கேள்விக்கு, திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு சொன்ன பதிலையே பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் தெரிவித்திருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. இதில் குறிப்பாக தேசிய அளவிலும், தமிழ்நாட்டிலும் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், முதல் கட்சியாக திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்தது.

 

இதனைத் தொடர்ந்து, திமுகவுடன் இருந்த விசிக, ஐ.யு.எம்.எல். ஆகியவையும் தவெகவின் அமைச்சரவையில் இடம் பெற்று ஆதரவு தெரிவித்தன. இடதுசாரிகளான சி.பி.எம்., சி.பி.ஐ., ஆகியவை வெளியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. தேசிய அளவில் இந்தியா கூட்டணியை அமைப்பதிலும், மத்திய அரசை வலுவாக எதிர்ப்பதிலும் தீவிரமாக இருந்த கட்சிகளில் திமுகவும் ஒன்றாக இருந்தது.

 

இந்நிலையில், காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும், யாரை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தும், அல்லது எந்தக் கட்சிக்கும் ஆதரவின்றி தனித்து திமுக தேர்தல் களத்தை சந்திக்க இருக்கிறதா அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறதா திமுக என பல்வேறு பேச்சுகள் எழுந்துவருகின்றன.

 

 

இந்தச் சூழலில்தான் தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த முறை தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் பாஜக கொண்டுவருகிறது என தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இதில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்விகள் எழுப்பின. இந்த கேள்விகள் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்பதைத் தாண்டி திமுக – பாஜக கூட்டணியா என்பதற்கான மறைமுக கேள்வியையும் சேர்த்தே எழுப்பியது.

 

திமுகவை பொறுத்தவரை தொகுதி மறுவரையறையில் கடந்த முறை எடுத்த நிலைப்பாட்டையே தற்போதும் தொடர்வதாக அக்கட்சி தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. குறிப்பாக திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன், “தமிழ்நாட்டின் நலனையும், நம் மாநிலத்திற்குரிய பிரதிநிதித்துவத்தையும் பாதிக்காத வகையில் ‘Fair Delimitation’ மேற்கொள்ள வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு.

 

 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் தி.மு.க. இப்போதும் உறுதியாக இருக்கிறது. எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், தடுமாற்றமும் இல்லை” எனத் தெளிவுப்படுத்தினார். இதன் பிறகும் திமுக பாஜக கூட்டணி குறித்தான பேச்சுகள் தொடர்ந்து எழுந்துவருகின்றன. இந்நிலையில், திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு கடந்த 9ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவரிடம், திமுக – பாஜக நெருங்கிவருகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “அரசியலில் எதிரி நண்பன் என்றெல்லாம் கிடையாது. மாறாக தமிழ்நாட்டிற்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வருகிறதோ அதனை திமுக ஆமோதிக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

அரசியலில் எதிரி நண்பன் என்றெல்லாம் கிடையாது என அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கனிமொழி சோமு தெரிவித்த கருத்து குறித்தும், திமுக – பாஜக கூட்டணி அமைக்கிறதா என்றும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை அவ்வளவுதான்” எனத் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon