--- --:--:-- --

2-வது டி20 போட்டி : மே.இ.தீவுகள் அணியிடம் இந்தியா தோல்வி

frh

மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது டி20 போட்டியில் 8 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

 

இந்தியா -மே.இ.தீவுகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2-வது போட்டி திருவனந்தபுரத்தில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி கேப்டன் போலார்டு, பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

முதல் போட்டியில், அபாரமாக ஆடி அரைசதம் அடித்த ராகுல் 11 ரன்களில் நடையைக் கட்டினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, இந்தப் போட்டியிலும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 ரன்களில் அவுட்டானார். அடுத்து இளம் வீரர் ஷிவம் துபேவின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர ஆரம்பித்தது. சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய துபே 30 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து கோஹ்லி (19), ஸ்ரேயாஸ் (10), ஜடேஜா (9), வாஷிங்டன் சுந்தர்(0) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரிஷப் பன்ட் 33 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

 

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிம்மன்ஸ், லீவிஸ் ஆகியோர் அதிரடியாக ஆடி, இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தனர். லீவில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ஹெட்மயர் 23 ரன்கள் சேர்த்து அவுட்டான நிலையில், சிம்மன்ஸ்(67)-பூரன்(38) ஜோடி நிலைத்து நின்று மே.இ.தீவுகள் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் போட்டியில் இந்தியாவிடம் பெற்ற தோல்விக்கு பழி தீர்த்தது.

 

மே.இ.தீவுகள் அணியின் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. இதனால் மும்பையில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள 3-வது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் கடும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Leave a Reply

Right Menu Icon