கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் எடியூரப்பா அரசுக்கு ஆபத்து நீங்கியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 6-ந் தேதி மினி பொதுத் தேர்தல் போல் 15 தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கியது. குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை தக்க வைக்க முடியும் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெறத் தொடங்கியது. இதனால் பாஜகவினர் உற்சாகம் அடைந்து கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில், தேர்தல் நடந்த 15 தொகுதிகளில், 12 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. காங்கிரசுக்கு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட சரத் கவுடா என்பவர் வெற்றி பெற்றார். இவரும் பாஜகவைச் சேர்ந்தவர் தான். பாஜகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றியும் பெற்று விட்டார்.
224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், 2 இடங்கள் தற்போது காலியாக உள்ளன. எனவே ஆளும் பாஜகவுக்கு 106 உறுப்பினர்கள் பலம் மட்டுமே உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க குறைந்த பட்சம் 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் 6 தொகுதிக்கு பதிலாக இரு மடங்காக 12 இடங்களை கைப்பற்றியதால் பாஜகவினர் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






