உ.பி.யில் 8 போலீசாரை கொன்ற ரவுடி விகாஸ் துபே கதை முடிந்தது..!! தப்பி ஓட முயன்ற போது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக் கொன்று தலைமறைவாக இருந்த ரவுடிக் கும்பல் தலைவன் விகாஸ் துபே ம.பி.யில் நேற்று பிடிபட்ட நிலையில், இன்று காலை அவன் கதையை முடித்தது உ.பி. போலீஸ் . மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பிடிபட்ட அவனை கான்பூர் அழைத்து வந்த போது கார் தலைகுப்புற கவிழ, அப்போது தப்பியோட முயன்ற விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக்கொன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
உ.பி.யின் கான்பூரைச் சேர்ந்தவன் விகாஸ் துபே என்ற ரவுடி . இவன் மீது கொலை,கொள்ளை, ஆள் கடத்தல் என 60-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இவனைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது இவனது ஆட்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒரு டிஎஸ்பி உட்பட 8 காவல் துறையினர் உயிரிழந்தனர். மேலும் 8 போலீசார் படுகாயமடைந்த நிலையில், போலீசாரிடம் இருந்த ஆயுதங்களையும் பறித்துக் கொண்டு விகாஸ் துபேயின் ரவுடிக் கும்பல் தலைமறைவாகி விட்டது.

உ.பி.யை உலுக்கிய இந்த என்கவுண்டர் சம்பவத்தை தொடர்ந்து கொலைகார ரவுடிக் கும்பலை கண்டதும் சுட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதுடன், விகாஸ் துபே பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு எனவும் அறிவித்திருந்தார். 20 தனிப்படைகளை அமைத்து உ.பி.மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். ஆனால் விகாஸ் துபேயோ உ.பி.யை விட்டு அரியானா, டெல்லி, ம.பி.என வெகு தூரத்திற்கு சென்று விட்டான்.
இந்நிலையில் உ.பி.யை விட்டே தலைமறைவாகியிருந்த விகாஸ் துபே நேற்று காலை மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனியில் பிடிபட்டான். அங்குள்ள பிரபல கோயிலில் சாமி கும்பிட முகக் கவசம் அணிந்த நிலையில் சென்ற அவனை அங்குள்ள வியாபாரி ஒருவர் அடையாளம் கண்டு விட்டார். உடனடியாக கோயில் காவலாளிகளிடம் தகவல் தெரிவிக்க, காவலாளிகள் சுற்றி வளைத்து விகாஸ் துபேயை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். உஜ்ஜைனியில் பிடிபட்ட துபேயை உ.பி.பேலீசார் தங்கள் கஸ்டடியில் எடுத்து காரில் கான்பூருக்கு அழைத்து வந்தனர்.
“இன்று காலை 7 மணியளவில் கான்பூர் புறநகர் பகுதியில் கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் விகாஸ் துபேவும், உடன் பாதுகாப்புக்கு வந்த எஸ்.ஐ. உள்ளிட்ட போலீசாரும் லேசான காயமடைந்தனர். அப்போது விகாஸ் துபே நைசாக தப்ப முயன்ற ஓட்டமெடுத்ததாகவும், உடனடியாக போலீசார் அவனை சுட்டுக் கொன்று கதையை முடித்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது”
இதற்கிடையே கடந்த 2 தினங்களில் மட்டும் உ.பி.யின் வெவ்வேறு பகுதிகளில் போலீசாரின் என்கவுண்டரில் விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவனுடைய மனைவி, மகன் இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.







