கொரோனா காலத்தை போல இந்தியாவில் மீண்டும் லாக்டவுன்..!
ஈரான்-அமெரிக்கா- இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விநியோகத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பல நாடுகள் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இலங்கையில், National Fuel Pass முறை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அரசுத் துறைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து அரசு, 1970-களில் இருந்தது போல, வாரத்தில் ஒரு நாள் கார் பயன்படுத்தாத ‘Car-less days’ திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறது.
உலக நாடுகளில் நிலைமை மோசமாகி வருவதால், இந்தியாவிலும் லாக்டவுன் விதிக்கப்படலாம் என்று வதந்திகள் பரவி வருகின்றன. இந்திய அளவில் “லாக்டவுன் 2026” என்பது ட்ரெண்டிங்காகி வருகிறது. எரிபொருள் இருப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தும் நிலையில் இந்த லாக்டவுன் விவாதங்கள் எழுந்துள்ளன.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “மீண்டும் லாக் டவுன் வரும் என சில தலைவர்கள் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. அரசியலுக்காக லாக்டவுன் பற்றி பேசுவது கவலையளிக்கிறது. கொரோனா காலத்தை போன்று மீண்டும் இந்தியாவில் லாக்டவுன் வராது. மீண்டும் லாக்டவுன் எனக் கூறுவது வதந்தி. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை. நாடு முழுவதும் போதுமான அளவு பெட்ரோல் டீசல் கையிருப்பு உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் லாக்டவுன் விதிப்பது தொடர்பாக எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும், மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடு தழுவிய ஊரடங்கு தொடர்பான அனைத்து வதந்திகளும் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும் பேசிய அவர், அரசு நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்றும் தற்போது நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது பொறுப்பற்ற செயல் என்றும், அது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்குகிறது என்றும் ஹர்தீப் சிங் பூரி கூறியிருக்கிறார். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க மத்திய அரசு முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.





