மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு..!
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாநிலங்களில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளில் உள்ள 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக வழங்கப்படுகின்றன.
இந்த அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடங்களை ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்க உத்தரவிடக் கோரி திராவிடர் கழகம், திமுக, அதிமுக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளும் தமிழக அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே என்றும் இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் தான் அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 27ம் தேதி அதாவது இன்று தீர்ப்பு வழங்குவதாக கூறியது.







