--- --:--:-- --

சசிகலா வெளியிடும் முக்கிய அறிவிப்பு..!

2

ஜெயலலிதா பிறந்தநாளில் அவரது தோழியான வி.கே.சசிகலா முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஓரிரு நாளில் சசிகலா தனது இறுதி முடிவை அறிவிப்பார் என்று சசிகலாவை சந்தித்த பிறகு முன்னாள் அரசு தலைமை கொறடா நரசிம்மன் பேட்டி அளித்துள்ளார்.

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தனித்து செயல்பட்டு வருகிறார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவுடன் கூட்டணி அமைத்த நிலையில் தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து சசிகலா சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் 2ஆம் கட்டமாக தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்.

 

சசிகலாவை சந்திக்க வந்த ஆதரவாளர்களுக்கு படிவம் ஒன்று வழங்கப்பட்டது. அதில் அவர்களது விவரம் மற்றும் ஏற்கனவே உள்ள கட்சியில் வகித்த பதவிகளின் பொறுப்புகள் உள்ளிட்டவை இடம் பெற்று இருந்தன. இதற்கிடையே தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தனிக்கட்சி தொடங்குவதற்கு சசிகலா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தனது ஆதரவாளர்கள் உடன் சசிகலா தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டனர்.

 

2026 சட்டமன்றத் தேர்தலில் சசிகலாவின் நிலைப்பாடு என்ன என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ள நிலையில் அமமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து வந்துள்ள ஆதரவாளர்கள் சசிகலாவை சந்தித்தனர். தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு சசிகலா தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

 

இதற்கிடையே சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அரசு தலைமை கொறடா நரசிம்மன் பேசியதாவது, “2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து ஆதரவாளர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது ஒரு சிலர் சசிகலா இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும் அவர் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.

 

அப்போது, இன்னும் ஓரிரு நாளில் சசிகலா தனது இறுதி முடிவை அறிவிப்பார்கள் என கூறிய போது புதிய கட்சி தொடங்க வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக சசிகலா அறிவிப்பார்கள். அவர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் உட்பட்டு நாங்கள் செயல்படுவோம் என தெரிவித்தார். அதன்படி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24 ஆம் தேதி தனது தேர்தல் நிலைப்பாட்டை சசிகலா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon