ஹிந்தி தெரியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்..! கனிமொழி ஆதங்கம்..!
ஹிந்தி தெரியவில்லை என்றால் பயிற்சிக் கூடங்களில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்களிடம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் நியூரோபதி மற்றும் யோகா மருத்துவர்களுக்கான சிறப்பு பயிற்சி கூட்டம் அமைச்சகத்தின் துணை செயலாளர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் அனைத்து விவாதங்களும் ஹிந்தியில் மட்டுமே நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக மாணவர்கள் கேட்ட போது ஹிந்தி தெரியவில்லை என்றால் கூட்டங்களில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆய்வு மற்றும் பயிற்சிக் கூட்டங்கள் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளிலும் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு நியூரோபதி மற்றும் யோகா மருத்துவர்கள் சங்கம் சார்பில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றில் எழுதப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தர்மபுரி எம்பி செந்தில் குமார் கூறியுள்ளார். ஹிந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் பொறுத்துக் கொள்ள போகிறோம் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் பயிற்சி வகுப்பில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று அந்த அமைச்சக செயலாளர் வைத்தியா ராஜேஷ் கூறியதாக தமிழக அதிகாரிகள் புகார் கூறி இருந்தனர்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் கனிமொழி அதிகாரியின் பேச்சு மத்திய அரசின் இந்தித் திணிப்பு கொள்கையை பிரதிபலிக்கிறது என்று சாடியுள்ளார். ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்திய ராஜேஷ் மீது மத்திய அரசு உடனே ஒழுங்கு நடவடிக்கை வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.







