சி.எம்.டி.ஏ. திவால் நிலைக்கு காரணம் என்ன? அன்புமணி கேள்வி
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் 4 புறநகர் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள், நிலப்பயன்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட சி.எம்.டி,.ஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அடுத்த மாதத்திற்கான ஊதியம் வழங்கக் கூட பணமின்றி திவாலாகி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
54 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் அடிப்படை செலவுகளுக்கு அரசிடம் உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சி.எம்.டி.ஏ தள்ளப்பட்டது ஏன்? என்ற உண்மை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். சி.எம்.டி.ஏ அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் யார், யாருக்கு வழங்கப்பட்டன? அவற்றில் ஊழல்கள், முறைகேடுகள் நடந்தனவா? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
அதே நேரத்தில் சி.எம்.டி.ஏ அமைப்பின் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான நிதியை உதவியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.






