--- --:--:-- --

திருச்சி ரயில் நிலைய கல்வெட்டில் இந்தி எழுத்துகள் : ஸ்டாலின் ஆவேசம்

15

மிழகத்தின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சி சந்திப்பு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில், இந்தி மொழியில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளதோடு, தி.மு.க. நிர்வாகிகள் அங்குள்ள இந்தி எழுத்துக்களைக் கருப்பு மை பூசி அழித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் புதிய நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என்ற இந்திப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இது ‘மொழி ஒன்று – வரிவடிவம் மூன்று’ என்ற அடிப்படையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இந்திப் பெயரையே எழுதி வைக்கும் மறைமுக இந்தித் திணிப்பு நடவடிக்கை என்று குற்றம் சாட்டப்பட்டது.

 

இந்த விவகாரத்தை அடுத்து, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, காஜாமலை விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் திருச்சி ரயில் நிலையத்திற்குச் சென்றனர். அங்குள்ள கல்வெட்டு மற்றும் நுழைவு வாயிலில் இருந்த இந்தி எழுத்துக்களின் மீது கருப்பு மை பூசி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

 

தொடர்ந்து, மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், உடனடியாக இந்திப் பெயரை நீக்கக் கோரி முழக்கமிட்டனர். இதனையடுத்து, ரயில்வே அதிகாரிகள் மேலதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

 

இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “பா.ஜ.க அரசின் இந்தித் திணிப்பு வெறி எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது” என்று சாடியுள்ளார். பி.எஃப் அலுவலகங்களில் ‘பவிஷ்ய நிதி பவன்’, குற்றவியல் சட்டங்களுக்குச் சமஸ்கிருதப் பெயர்கள், ‘ஜல் சக்தி’ அமைச்சகம் எனத் தொடர்ச்சியாக இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாகப் பட்டியலிட்டார்.

 

தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். தமிழ், ஆங்கிலப் பெயர்களுக்குப் பதில் இந்தியைத் திணிப்பதை நிறுத்திவிட்டு, உடனடியாக சரியான தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும். இல்லையெனில் தமிழர்களின் போராட்டச் சூட்டை மத்திய அரசு உணர வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழச்சி தங்கபாண்டியன் (எம்.பி): தெற்கு ரயில்வே நிர்வாகம் தமிழர்களின் மொழிப் பற்றைப் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், புறவாசல் வழியாக இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டுத் தமிழில் பெயரிட வேண்டும் என வலியுறுத்தினார்.

 

தமிழிசை சௌந்தரராஜன் (பா.ஜ.க): “சில அதிகாரிகள் செய்யும் தவறுகளால் மத்திய அரசு மீது தேவையற்ற பழிகள் விழுகின்றன” என்று கூறிய அவர், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

 

சு. வெங்கடேசன் (எம்.பி): தமிழிசையின் கருத்துக்குப் பதிலடி கொடுத்த அவர், “வந்தே பாரத், அம்ரித் பாரத் என அனைத்துக்கும் இந்தியில் பெயர் வைப்பது அரசின் கொள்கையே தவிர, அதிகாரிகளின் தவறு அல்ல” என்று சுட்டிக்காட்டினார்.

 

தற்போது திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர்களை அகற்றும் நடவடிக்கைகள் அதிகாரிகளால் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Right Menu Icon