இணையவழி வகுப்புகளை நடத்த அரசு வெளியிட்டுள்ள வழிமுறை..!
இணையவழி வகுப்புகளை எப்படி நடத்த வேண்டும் என்பதற்காக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் முறையாகப் பின்பற்றுவதில்லை என தெரியவந்துள்ளது. இணைய வழி வகுப்புகள் நடத்தப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததை தொடர்ந்து பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையிலான குழு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அதற்கான அரசாணையும் வெளியானது.
அந்த அரசாணையின்படி எந்த ஒரு மாணவரும் இணைய வழி வகுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்தக்கூடாது. இணைய வழி வகுப்பில் பங்கேற்றதன் அடிப்படையில் வருகைப்பதிவோ, மதிப்பெண் வழங்கவோ கூடாது.
ஆனால் பள்ளிகள் இணைய வழி வகுப்புகளில் கலந்துகொள்ள இயலாத நிலையில் உள்ள மாணவர்களையும் அதில் பங்கேற்க கட்டாயப்படுத்துவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில் மூத்த குழந்தைக்கு இணையவழி வகுப்புக்கான கருவியை கொடுக்கும் வகையில் திட்டமிட வேண்டும்.
அதற்கு ஏற்றார்போல் பள்ளிகள் அந்த குழந்தைகளுக்கு இணைய வழி வகுப்புகளில் திட்டமிட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் அப்படி திட்டமிடுவது இல்லை என்கின்றனர் பெற்றோர்கள்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரையிலான இரண்டு வகுப்புகள் மட்டுமே ஒரு நாளைக்கு இருக்கலாம். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நான்கு வகுப்புகள் மட்டுமே ஒரு நாளைக்கு இருக்க வேண்டும் என்கின்றது வழிகாட்டு நெறிமுறை.
ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையில் 10 முதல் 15 நிமிடங்கள் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் நிஜத்தில் அப்படி நடப்பதில்லை என பெற்றோர்கள் பலர் புகார் தெரிவிக்கின்றனர். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவதோடு நிறுத்திவிடாமல் அதனைப் பள்ளிகள் பின்பற்றுகின்றனவா என்பதையும் பள்ளிக்கல்வித்துறை கண்காணிக்க வேண்டும்.







