வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தும் பேரணி..!
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி டெல்லியில் துணைநிலை ஆளுநர் இல்லத்தை முற்றுகையிட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் பேரணி சென்றனர்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை பேரணி நடைபெற்று வருகிறது.
ஆளுநர் மாளிகையை நோக்கி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் பேரணியாக சென்றனர். பேரணிக்கு முன்பாக பேசிய ராகுல் காந்தி மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை காங்கிரஸ் பின்வாங்காது என்றார்.
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது என்றும் விவசாயிகளை அழிக்கக் கூடியவை என்றும் கூறிய ராகுல் காந்தி இந்த சட்டங்கள் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் நோக்கில் கொண்டு வரப்பட்டவை என்றும் குற்றம் சாட்டினார்.
டெல்லி துணைநிலை ஆளுநர் இல்லத்தின் முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.






