வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி விபத்து..!
மகாராஷ்டிர மாநிலம், கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரௌல்கானில் சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் எஸ்.பி.எல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று (மார்ச்.01) காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சுமார் 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், படுகாயமடைந்த 18 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாக்பூர் கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போடார் தெரிவித்துள்ளனர். வெடி விபத்து தொடர்பான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதற்கட்ட தகவலின் படி, இந்த வெடிவிபத்து காலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்துள்ளது. தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்திருந்த நிலையில் டெட்டனேட்டர் உற்பத்தி செயல்முறையின் போது திடீரென சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தின் தீவிரம் காரணமாக சம்பந்தப்பட்ட பிரிவின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
வெடிப்பு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட பகுதியில் 25 முதல் 30 தொழிலாளர்கள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை, தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் அவசர சேவைகள் தீயை கட்டுக்குள் கொண்டுவரவும், சிக்கியுள்ள தொழிலாளர்களைத் தேடவும் போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.





