பதினோராம் வகுப்பு மாணவர் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை..!
பொதுத்தேர்வு அச்சத்தில் பதினோராம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாசத்தை கொட்டி வளர்த்த மகனை பறிகொடுத்துவிட்டு வேதனையில் தவிக்கும் பெற்றோர் சென்னை கொளத்தூர் காமராஜ் நகர் பகுதியில் வசித்த பிரவீனுக்கு வயது 16தான் ஆகிறது.
இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொதுமுடக்கம் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஹோம்வொர்க் எழுத வேண்டுமென விடுப்பு எடுத்து அவர் வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய தாய் அங்கு கண்ட காட்சியால் அதிர்ந்து போய்விட்டார்.
எந்த தாயும் தன் வாழ்வில் பார்க்க கூடாத காட்சி அது. தனது புடவையிலேயே மகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து கதறி அழுதுள்ளார். தாய் காமாட்சி பள்ளிச் சிறுவன் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்னவாக இருக்கும் என விசாரணையை தொடங்கியது காவல்துறை. அதில் பிரவீன் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் தன் துயர முடிவு குறித்து உருக்கமாக விவரித்திருக்கிறார்.
பாடத்தில் படு சுட்டியான பிரவீன் வீட்டிற்கு செல்ல பிள்ளை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற கடுமையாக படித்திருக்கிறார். ஆனால் கொரொனா பாதிப்பு இதற்கு பெரும் முக்கிய முட்டுக்கட்டையாக வந்துள்ளது.
இதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவில்லை. காலாண்டு மற்றும் அரையாண்டில் அடிப்படையிலேயே மதிப்பெண் வழங்கப்பட்டதால் பிரவீன் எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் கிடைத்துள்ளது. வகுப்பு தேர்ச்சி பெற்றவர் இணைய வழி மூலமாக கல்வி பயின்று வந்துள்ளார்.
பொது முடக்க தளர்வுக்கு பிறகு பள்ளிக்கு சென்ற பிரவீனை அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் புதிய தேர்வு இருப்பதால் அதற்கு தயாராக வேண்டும் என ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள் .
இதனால் மன உளைச்சலில் இருந்த பிரவீன் ஒரு வருடம் முழுவதும் படித்துவிட்டு எழுதும் தேர்வை 3 மாதங்களில் படித்துவிட்டு எப்படி எழுதுவது என உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது துயர முடிவை தானே தேடிக் கொண்டு உள்ளார்.






