இன்று முதல் அமலாகிறது மின்னணு ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறை..!
வாகன சோதனையின்போது ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட காகித வடிவிலான ஆவணங்களுக்கு பதிலாக மின்னணு ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு ஆவணங்கள், காப்பீடு சான்றிதழ் ஆகிய ஆவணங்களை டிஜி லாக்கர் மற்றும் எம்பரிவாகன் மூலம் வாகன ஓட்டிகள் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம். இதனிடையே நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகன பதிவு அட்டை, ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஐந்து புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஓட்டுநர் உரிமம், மருத்துவ காப்பீடு ஆகியவற்றை இணையதளம் வாயிலாக பெறலாம். புதிதாக வழங்கப்படும் ஓட்டுநர் உரிமத்தில் க்யூ ஆர் கோடு இடம்பெறவுள்ளது. புதிய விதிமுறைகளின்படி வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் ஆயிரம் ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






