--- --:--:-- --

“இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே எந்த சண்டையும் நடக்கவில்லையாம்!!” பூசி மெழுகும் அமைச்சர் ஜெயக்குமார் !!

15

திமுக செயற்குழுவில் முதல்வர் எடப்பாடிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே எந்த சண்டை, சச்சரவும் நடக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தடாலடியாக பூசி மெழுகியுள்ளது அடேங்கப்பா பாணியாக அமைந்துள்ளது.

 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 28-ந் தேதி நடந்த செயற்குழுவில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே நீயா ? நானா? என பெரும் வாக்குவாதம் முற்றியதாகவே கூறப்பட்டது. இருவரும் விட்டுக் கொடுக்காமல் முரண்டு பிடித்ததால் முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவெடுக்காமலே செயற்குழு முடிவடைந்தது. பின்னர் வரும் 7-ந் தேதி முதல்வர் வேட்பாளர் யார்? என அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

செயற்குழு முடிந்த பின், கடந்த 2 நாட்களாக ஓ பிஎஸ் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியில் தனக்கான முக்கியத்துவத்தை நிலைநாட்ட பல்வேறு அதிரடிகளை காட்ட ஓபிஎஸ் தயாராகி விட்டார் என்றும், துணை முதல்வர் பதவியைக் கூட ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்து விட்டார் என்றும் பரபரப்பு கிளம்பியது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ்சை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதனால் ஓபிஎஸ் சற்று அடக்கி வாசிப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு அடையாறில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அரசு சார்பில் விழா நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று சிவாஜி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின் ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்திப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அவர் சந்திக்காமல் காரில் ஏறிச் சென்றுவிட, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

 

அப்போது அதிமுகவில் நிலவும் குழப்பம் குறித்து கேட்டதற்கு, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட அனைவருக்கும் கட்சியின் கட்டுப்பாடு முக்கியம். ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே எந்த சண்டை சச்சரவும் இல்லை. கட்சியினருடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்துவதில் எந்த தவறும் இல்லை. கட்சியினருடன் தானே அவர் ஆலோசனை நடத்தினார் என்று மழுப்பலாக பதிலளித்து பூசி மெழுகியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Leave a Reply

Right Menu Icon