--- --:--:-- --

தி.மு.க. மாநாடு நிறைவு..!

4

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக சார்பில் மார்ச் 9-ம் தேதி நடத்தப்பட்ட பிரம்மாண்ட மாநில மாநாடு நேற்று இரவு முடிவடைந்தது. எனினும், மாநாட்டிற்கு வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வெளியேறியதால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விடிய விடிய கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

 

இந்த மாநாட்டிற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 50,000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். இதற்காக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் மாநாடு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, தொண்டர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கினர்.

 

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் நுழைந்ததால், போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. குறிப்பாக திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்வதற்குச் சாதாரணமாக 45 நிமிடங்கள் ஆகும் நிலையில், நேற்று ஏற்பட்ட நெரிசலால் 3 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் தவித்தனர். பிரதான சாலையில் நெரிசல் அதிகரித்ததால், ஓட்டுநர்கள் மாற்றுப் பாதைகளைத் தேடிச் சென்றனர். இதனால் கிராமப்புறங்களுக்குச் செல்லும் உட்புறச் சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 

 

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த திருச்சி மாவட்ட காவல்துறை முன்கூட்டியே சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மாநாட்டிற்கு வந்த பேருந்துகள் நம்பர் 1 டோல்கேட் – Y ரோடு – பனமங்கலம் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை – குமுளூர் கட் ரோடு – தச்சங்குறிச்சி வழியாகத் திருப்பி விடப்பட்டன. இதனால் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் பேருந்துகளின் நடமாட்டம் ஓரளவு தவிர்க்கப்பட்டது.

 

அதேபோல் சென்னையில் இருந்து வந்த பேருந்துகள் பெரம்பலூர் – சிறுவாச்சூர் – பாடாலூர் வழியாக மாநாட்டுத் திடலுக்கு அனுப்பப்பட்டன. இருப்பினும், வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், நள்ளிரவைத் தாண்டியும் விடிய விடிய நெடுஞ்சாலை வாகனக் கடலாகவே காட்சியளித்தது. பல மணிநேரம் காத்திருந்த பயணிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அதிகாலையில் தான் போக்குவரத்து படிப்படியாகச் சீரடையத் தொடங்கியது.

Right Menu Icon