திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ ஏகாந்த திருவிழா நடைபெற உள்ளது.
இதற்கான தேவஸ்தான ஆலோசனை கூட்டம் திருமலையில் நடைபெற்றது. இதில் இன்று முதல் பக்தர்களை இலவச தரிசனத்திற்கு அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் தேவஸ்தான செலவுகளுக்கு கோவில் வைப்பு நிதியில் இருந்து பணத்தை எடுக்க ஆந்திர அரசிடம் அனுமதி பெறுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இது தவிர ஏற்கனவே உண்டியலில் சேர்ந்துள்ள மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 50 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இலவச தரிசன டிக்கெட்டுகள் அந்தந்த கவுண்டர்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.






