வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அறிவிக்கப்பட போகும் தண்டனை விவரங்கள்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதி மன்ற செயல்பாடுகள் குறித்து விமர்சித்த விவகாரத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
கொரொனா சமயத்தில் விலை உயர்ந்த வெளிநாட்டு ரக மோட்டார் சைக்கிளுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே முகவுரை அணியாமல் அமர்ந்திருப்பது மாதிரியான புகைப்படம் வெளியாகி இருந்தது.
அது தொடர்பாக பிரசாந்த் பூஷன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு இருந்ததாக கூறி அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி மிஸ்ரா தலைமையிலான 3 பேர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. பிரஷாந்த் பூஷன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் அவருக்கான தண்டனை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
ஆனால் மன்னிப்பு கேட்பது தனது மனசாட்சிக்கு விரோதமானது என கூறி மன்னிப்பு கேட்க மறுத்திருந்தார் பிரசாந்த் பூஷன். இந்நிலையில் இந்த வழக்கில் இவருக்கான தண்டனை குறித்த உத்தரவுகளை அறிவிக்க உள்ளது உச்சநீதிமன்றம்.







