சைடஸ் கெடில்லா நிறுவனத்தின் கொரொனா தடுப்பூசி..!
கொரொனா பரவலை கட்டுபடுத்த இந்தியாவில் இரண்டாவதாக மேலும் ஒரு தடுப்பூசி தயாராகியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் கெடில்லா என்ற நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் கொரொனா பரவத் தொடங்கியதும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய இந்த நிறுவனம் ஏப்ரல் மாத இறுதியில் ஆய்வக சோதனையில் முதற்கட்ட வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் சைடஸ் கெடில்லா நிறுவனத்தின் தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது இரண்டு நிலைகளில் சோதனை செய்ய மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாசின் என்ற தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 30 நிறுவனங்கள் கொரொனா தடுப்பை மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. உலகம் முழுவதும் 17 கொரொனா தடுப்பு மருந்துகளுக்கு மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.







