கேரளாவில் பக்ரீத் பண்டிகை காரணமாக ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது..!
கேரளாவில் பக்ரீத் பண்டிகை காரணமாக மூன்று நாட்களுக்கு ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் நேற்று முதல் நாளை வரை துணிக் கடைகள், நகைக் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், பரிசுப்பொருட்கள் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்கள் அதிகளவில் கூடுவதற்கு வழிவகுக்கும் என்றும் தற்போதைய மருத்துவ அவசர நிலை சூழலில் தளர்வுகள் தேவையற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
தளர்வுகளை கேரள அரசு திரும்பப் பெறாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.






