ஆரவாரம் இல்லாமல் அமைதியாக முதன் முறையாக திருப்பூருக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ! “தடுப்பூசி போடும் திட்டம் துவக்கி வைப்பு..”தொழில் அதிபர்கள் 2.70 கோடி கொரானா நிதி வழங்கினர் !!
தமிழக அரசின் சார்பில் 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு சென்னையில் உள்ள தலைமை செயலகத்திற்கு வந்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். அங்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த மின்சாரத்துறைஅமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் சேலம் மாவட்ட கலெக்டரிடம் கொரோனா தடுப்பு ஆய்வு பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.
சேலம் உருக்காலைக்கு சென்ற முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டு இருந்த அதிநவீன 500 படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனையை பார்த்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் உள்ள நேதாஜி ஆயத்த ஆடைத் தொழில்நுட்ப பூங்கா வந்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது அந்த பூங்காவிலுள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் 4 இளம்பெண்கள் உள்பட 20 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது சான்றிதழ் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து திருப்பூரைச் சேர்ந்த பல்வேறு தொழிலஅதிபர்கள் சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூபாய் 2 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தொழிலதிபர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இதில் திருப்பூர் ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன் ரூ.1 கோடியும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ராஜா சண்முகம் ரூ. 50 லட்சமும், திருப்பூர் சாய ஆலைகள் சங்கம் சார்பில் முருகசாமி ரூ. 10 லட்சமும், திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்தின் ரகுபதி ரூ 10 லட்சமும், மூர்த்தி ரூ.10 லட்சமும், கே.ஆர்.சி ஹவுசிங் மற்றும் இன்பராஸ்ட்ரக்சர் கம்பெனி சிகாமணி ரூ.10 லட்சமும், டையிங் அசோசியேசன் சேகர் ரூ. 10 லட்சமும், வெள்ளகோவில் ஜெகத்குரு டெக்ஸ்டைல்ஸ் முருகேசன் ரூ. 10 லட்சமும், ஜே.வி டேப்ஸ் பழனிசாமி ரூ.15 லட்சம், கோவை டாக்டர் தங்கவேல் ரூ 10 லட்சமும், நிட்மா சங்க தலைவர் அகில் ரத்தினசாமி ரூ.5 லட்சமும், நிட்மா சங்க செயலாளர் ராஜாமணி ரூ.5 லட்சமும், சைமா தலைவர் வைகிங் ஈஸ்வரன் ரூ 15 லட்சமும், விக்னேஷ் ஏஜென்சீஸ் ஆறுமுகம் ரூ 10 லட்சம் என 2 கோடியே 70 லட்சம் நிதியாக பெறப்பட்டது.
பின்னர் சுமார் 12.17 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கோவைக்கு சென்றார். இந்நிகழ்ச்சியில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், எம்.பி சுப்பராயன், மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கு மண்டல ஐ.ஜி அமல்ராஜ், டிஐஜி நரேந்திரன்நாயர், ,திருப்பூர் மாவட்ட எஸ்.பி.திஷாமித்தல், திருப்பூர் மாநகர போலீஸ்கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
ஆரவாரம் இல்லாமல் அமைதியாக வந்த முதல்வர்!
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வருகையின்போது எந்தவித ஆரவாரம், பகட்டும் இல்லாமல் அமைதியாக வந்தார். அவருக்கும் ஒரு செவிலியர்சானிடைசர் அடிக்க. முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சிரித்துக்கொண்டே கைகளில் தேய்த்துக்கொண்டார்.
அவரையும் ஒரு செவிலியர் உடலின் வெப்பநிலையை சோதித்தார்.ஒரு பட்டாசுகள் வைக்கப்படவில்லை. கட் அவுட்டுகள் இல்லை. பேப்பர்களில் விளம்பரம் கொடுக்கப்படவில்லை. 100 க்கும் மேற்பட்ட கார்கள் தொடரவில்லை.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கே அழைப்புகள் விடுக்கப்பட்டு இருந்தது. மற்றவர்களுக்கு எந்த அழைப்பு இல்லை. வந்திருந்த முக்கிய விருந்தினர்கள் கூட சால்வை மற்றும் பொக்கே கொடுக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அனைவரும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பல்வேறு புத்தகங்களை வழங்கினர்.






