--- --:--:-- --

டாஸ்மாக் ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் மனு தள்ளுபடி..!

02

டாஸ்மாக் டெண்டர் மற்றும் மதுபானக் கொள்முதல் முறைக்கேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணையின் ஆரம்ப நிலையில் உள்ள இந்த வழக்கில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்கான முகாந்திரங்கள் இருப்பதால், அவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகக் கூறி நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

 

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 5,380 மதுக் கடைகள், 3,240 மதுக் கூடங்கள் இயங்குகின்றன. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளின் விற்பனை உயர்ந்தாலும், வருவாய் குறைந்தது. பல்வேறு முறைகேடுகள் காரணமாக இந்த வருவாய் குறைந்ததாகப் புகார் எழுந்தது.

 

 

இதையடுத்து, தமிழக அரசு உத்தரவின்பேரில், தமிழக ஊழல் தடுப்பு-கண்காணிப்புத் துறை டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த எஸ்.விசாகன் ஐ.ஏ.எஸ், டாஸ்மாக் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளர்கள் டி.ராமதுரை முருகன், ஆர்.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் ராஜேஷ் ராஜ் சண்முகவேல், தி.மு.க மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளரும், கரூரைச் சேர்ந்த மூலனூர் எஸ்.கார்த்திக் ஆகிய 7 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தது.

 

 

இதைத் தொடர்ந்து வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், தமிழகம் முழுவதும் சென்னை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

 

 

கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, அவரது நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு நீதிபதி இளநந்திரையன் முன்பு இன்று (30.07.2026) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

 

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை. டாஸ்மாக் அதிகாரிகள் செய்த குற்றத்துக்கும் செந்தில் பாலாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனக் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பு வழக்கறிஞர், “ரூ. 100 கோடி வரை முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. புலன் விசாரணை தொடக்க நிலையிலேயே இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று வாதிட்டார்.

 

 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபத் இளந்திரையன், “டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. செந்தில் பாலாஜி காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon