சென்னை புறநகர் ரயில் சேவை சிக்கலுக்கு நிவர்த்தி..!
சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோர் முதல் பல்வேறு பணிகளுக்குச் செல்வோர் வரை என அன்றாடம் பெரும்பாலானோர் நம்பியிருப்பது ரயில் சேவையைத்தான். குறிப்பாக புறநகர் பகுதிகளிலிருந்து சென்னை நகருக்குள் வரும் பலர் ரயில் சேவையையே நம்பியுள்ளனர். குறித்த நேர பயணம் மட்டுமல்லாமல் கட்டணமும் குறைவாக இருப்பதால் பலரது முதன்மைத் தேர்வாக ரயில் பயணங்கள் உள்ளன.
இந்நிலையில், இப்படி பயணம் செய்து வந்தவர்களுக்கு கடந்த ஒருவாரமாக சிக்கல் ஏற்பட்டது. அதற்குக் காரணம், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள். புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த பிளாட்பார்ம் 10 மற்றும் 11 ஆகியவை மூடப்பட்டு, எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் பிளாட்பார்மில் தற்போது புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதன் காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு மார்க்கத்தில் இயங்கும் புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தினசரி இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவை எண்ணிக்கை, ஏப்ரல் 5ஆம் தேதி வரை 204-லிலிருந்து 115-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 15 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 45 நிமிடங்களுக்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்-ஐ திமுக எம்.பி. தயாநிதி மாறன் சந்தித்து மனு அளித்தார். மார்ச் 30ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க உறுதி அளித்திருப்பதாகவும் தயாநிதி மாறன் தெரிவித்தார். இதனிடையே பயணிகளின் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு தெற்கு ரயில்வே சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை என இரு மார்க்கங்களிலும் நாளை முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ரயில் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் இந்த பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 6.40 மணி முதல் 9.40 மணி வரை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு 7 நிமிட இடைவெளியில் மொத்தம் 20 நடைகளாக மாநகர பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஒவ்வொரு 7 நிமிடத்திற்கும் ஒரு பேருந்து இயக்கப்படும். இந்த பேருந்துகள் தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், கிண்டி, எழிலகம், தலைமைச் செயலகம், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
அதேபோல திருச்சிக்கு எழும்பூரிலிருந்து புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் காலை 8 மணிக்கு பதிலாக காலை 10.15 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை ஆகியவையும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10ஆம் தேதிக்குள் Peak hours போக்குவரத்து தேவைகள் 100 சதவிகிதம் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெற்கு ரயில்வே நம்பிக்கை தெரிவித்துள்ளது.





