தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு ..!
வெப்ப சலனத்தினால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி சென்னையில் நேற்று மாலை ஒரு சில இடங்களில் மழை பெய்தது, அதை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. புரசைவாக்கம், எழும்பூர், மைலாப்பூர், மந்தவெளி பகுதிகளில் மழை பெய்தது.
நுங்கம்பாக்கம், கேகே நகர், அசோக் நகர், ஆதம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோன்று சென்னையில் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், குன்றத்தூர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
இதேபோன்று காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது.






