--- --:--:-- --

கோவை அருகே மயானம் ஆக்கிரமிப்பு..!

4

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மயானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடமில்லாமல் ஒரு சடலத்தின் மேல் மற்றொரு சடலத்தைப் புதைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

 

கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சொலவம்பாளையம் கிராமத்தில் சுமார் 84 சென்ட் பரப்பளவில் ‘அரிஜன மயானம்’ அமைந்து உள்ளது. இந்த மயானத்தை சொலவம்பாளையம், எம்.ஜி.ஆர் நகர், அண்ணா நகர் மற்றும் சிக்கலாம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

 

அரசு ஆவணங்களில் இந்த இடம் ‘அரிஜன மயானம் மற்றும் வண்டிப்பாதை’ எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வண்டிப்பாதையில் தார்ச் சாலை அமைக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளது.

 

இந்நிலையில், மயானத்தை ஒட்டியுள்ள நில உரிமையாளர்கள் மற்றும் சிலர் அந்த இடத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. மயான பகுதியில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துவது, அதிகப்படியான குப்பைகளை கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் மயானத்தின் பரப்பளவு சுருங்கி வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

ஆக்கிரமிப்பு மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக ஒருவர் உயிரிழந்தால் அவரது உடலை புதைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதிய இடவசதி இல்லாத காரணத்தால், ஏற்கனவே புதைக்கப்பட்ட சடலங்களுக்கு மேலே மற்றொரு சடலத்தைப் புதைக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது உயிரிழந்தவர்களின் கண்ணியத்தைச் சிதைப்பதாகப் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். அந்த மனுவில், “மயானத்தில் குப்பைகளைக் கொட்டுவதையும், வாகனங்களை நிறுத்துவதையும் உடனடியாகத் தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, மயானத்தைச் சுற்றி பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும். மேலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். மயான இடத்தைப் பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நான்கு கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Right Menu Icon