மகளிர் உரிமைத் தொகை – டெல்லி ஓனர்கள் சூழ்ச்சிதான் காரணம் : இ.பி.எஸ்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மகளிர் சிறப்பு உரிமைத்தொகையாக தமிழக மகளிர்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 செலுத்தினார். இது ஒட்டுமொத்த தமிழக மகளிருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இந்த திட்டத்தை பலரும் தி.மு.க-வின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றனர். மேலும், தி.மு.க தான் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என பலர் தங்களின் கருத்துக்களை முன் வைத்தனர்.
ஆனால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , இது பயத்தால் வந்த திட்டம், தேர்தலை நினைத்து முதல்வர் பயப்படுகிறார். அதனால் தான் இந்த ஐயாயிரம் ரூபாய் திட்டத்தை வழங்கியிருக்கிறார். மேலும் அ.தி.மு.க கொடுக்கும் அழுத்தத்தால் தான் இந்த திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார் என கூறினார்.
இதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது ‘பூமராங்’ ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்!
அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர். பழனிசாமி, உங்கள் அழுத்தம் காரணமல்ல. “உங்கள் டெல்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்!”
இதனைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன். பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதில் இருந்தே திராவிட மாடல் சத்தமில்லாமல் நடத்திய surgical strike உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய HIT அடித்துள்ளது எனப் புரிந்துகொள்கிறேன்.
Copy, paste அரசியல் என்பது காலங்காலமாக அ.தி.மு.க.வின் வாடிக்கை என்பதைத் தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள். அதனால், புதுசா ஏதாவது சொல்லுங்க! விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என திராவிட மாடல் அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் திமுக பெண்கள் பவர் என்ஜின் முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது!” என்று குறிப்பிட்டுள்ளார்.





