செல்போன் மூலம் குறைகளை தெரிவிக்கும் திட்டம் அறிவிப்பு..!
செல்போன் மூலம் அரசுக்கு குறைகளை தெரிவித்து தீர்வு காணும் திட்டம் ஒரு வாரத்தில் தொடங்கப்பட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காட்டில் அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பெஞ்சமின், கா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை சிடியை முதலமைச்சர் வெளியிட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வீர வாளும், செங்கோலும் பரிசு அளித்துள்ளனர். முன்னதாக உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதாக கூறி அவற்றை பட்டியலிட்டார்.
மக்கள் அனைவரும் இருக்கும் இடத்தில் இருந்தபடியே தங்கள் குறைகளை 1100 என்று எண்ணை தொடர்புகொண்டு அரசுக்கு தெரிவித்து தீர்வுகாண திட்டம் ஒரு வாரத்தில் தொடங்கப்பட இருப்பதாக அறிவித்தார்.






