--- --:--:-- --

நவம்பர் முதல் மெரினா திறக்கப்படுமா? ஆய்வு நடத்த அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

_beach

சென்னை மெரினா கடற்கரையை மக்கள் பயன்பாட்டிற்கு நவம்பரில் திறக்கலாமா? என ஆய்வு நடத்தி முடிவு செய்யுமாறு மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட இன்னும் தடை உள்ளது. கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள கடற்கரையை திறக்க உத்தரவிடக் கோரி மீனவர்கள், கடற்கரையில் தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, மெரினா கடற்கரை மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? என கேள்வி எழுப்பியிருந்த உயர் நீதிமன்றம், தமிழக அரசின் முடிவு குறித்து பதிலளிக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்திலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

மெரினா கடற்கரையை நவம்பரில் திறந்து விடுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது தமிழக அரசு தான் இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகளோ, நவம்பரில் திறப்பதற்கான வாய்ப்புகள் குறித்து மாநகராட்சி ஆணையரும், மாநகர காவல் ஆணையரும் ஆய்வு நடத்தி அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தமிழக அரசும் உரிய முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon