--- --:--:-- --

முதல்வர் எடப்பாடியின் தாயார் மறைவு: ஆளுநர் மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

îîè

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, துணை முதல்வர் ஓ.பி.எஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள், வயது மூப்பு காரணமான உடல் நிலை பாதிப்பால் சேலம் தனியார் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது உடல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தாயாரின் மறைவு செய்தி கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கார் மூலம் சிலுவம்பாளையம் விரைந்து வந்தார். தாயாரின் உடலுக்கு அவர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைச்சர்கள்  அரசியல் கட்சியினர், அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

 

இதனைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணியளவில் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் தவசாயி அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

 

ஸ்டாலின் இரங்கல்

 

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் புரோஹித் தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடியை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அன்னையை இழந்து வாடும் முதலமைச்சருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

இதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் முதல்வர் எடப்பாடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்ததுடன் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முதல்வரின் அன்புத்தாயார் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகவும், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் நேரில் தெரிவிப்பதற்காக பிற்பகலில் விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் சேலம் சென்றார். இதேபோல் தமிழக அமைச்சர்கள் பலரும் முதல்வர் எடப்பாடியை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

 

மேலும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வி.சி.க தலைவர் திருமாவளன், நடிகர் ரஜினிகாந்த், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலரும் முதல்வர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், இரங்கல் செய்தி வெளியிட்டும் ஆறுதல் கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon