--- --:--:-- --

‘சாரி வேண்டாம்’ என பேனர்… ‘சாரி’ கேட்கச் சொன்ன விஜய்! தவெக ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றதா?

hq720

காவல்துறையினரின் சித்திரவதை மரணங்களைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதன் தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில், ஜூலை 12இல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், முதல் முறையாகப் பொதுவெளியில் நேரடியாகப் போராட்டத்தில் பங்கேற்ற விஜய், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். தவெகவுக்கு மட்டும் ஏன் காவல்துறை இத்தனை கெடுபிடிகளை விதிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளன இந்த ஆர்ப்பாட்டம் அக்கட்சிக்குச் சாதனையா அல்லது சறுக்கலா என்பதை பார்ப்போம்.

 

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமார், போலீசாரின் விசாரணையின்போது அடித்து சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்குக் கடும் அவப்பெயரை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு 24 ‘லாக் அப்’ மரணங்கள் நடந்துவிட்டதாகக் குற்றம்சாட்டின. அஜித்குமாரின் வீட்டுக்கு அரசியல் தலைவர்கள் படையெடுத்த நிலையில், யாருக்கும் சொல்லாமல் திடீரென இரவில் அங்கு சென்ற விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி அளித்தார்.

 

போராட்டத்திற்கு அனுமதி பெறவே போராட்டம்!

 

இறந்த காவலாளி அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கேட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், தவெகவுக்கு அனுமதி அளிப்பதில் காவல்துறை பெரும் கெடுபிடிகளைக் காட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நீதிமன்றப் படிகளை ஏறி, தவெக தரப்பு அனுமதி வாங்கும் நிலை ஏற்பட்டது.

 

முதலில் ஜூலை 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தக் கேட்ட அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் தவெக முறையிட்டது. அப்போது, “வேறு இடத்தை தேர்வு செய்யும்படி காவல்துறை வாய்மொழியாக அறிவுறுத்தியது. மாற்று இடத்தைத் தேர்வு செய்து விண்ணப்பித்தும், அதைப் பரிசீலிக்கவில்லை” என தவெக தரப்பு வாதிட்டது. ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிப்பது மட்டும் காவல்துறையின் வேலையல்ல என்று அறிவுறுத்திய நீதிபதி, மீண்டும் விண்ணப்பிக்கும்படி தவெகவுக்கு உத்தரவிட்டார்.

 

இதையடுத்து, ஜூலை 13-ம் தேதி காலை 9.30 மணிக்கு பேரணிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்தது. வழக்கமாக எந்த அரசியல் நிகழ்வுகளும் நடைபெறாத சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அருகில் மிகப்பெரிய அரசு மருத்துவமனை, கூவம் நதி என வித்தியாசமான சூழலில், 16 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. பட்டாசுகள் வெடிக்கக்கூடாது, இருசக்கர வாகனப் பேரணி செல்லக்கூடாது என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

 

‘சாரி’ வேணுமா, வேண்டாமா?

 

கடந்த 4 ஆண்டுகளில் காவல் மரணங்களுக்கு ஆளான 24 பேரின் குடும்பத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து வந்த விஜய், மிகுந்த அமைதியுடனும், இறுக்கமான முகத்துடனும் காணப்பட்டார். “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என பதாகைகளை ஏந்தி தொண்டர்கள் கோஷமிட்டனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய், “லாக் அப் மரணங்களால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களிடம் முதல்வர் ஸ்டாலின் ‘சாரி’ கேட்க வேண்டும்” என்று பேசியது, பதாகையின் வாசகத்திற்கு முரணாக அமைந்தது.

 

‘நீங்க எதுக்கு முதல்வர் சார்?’ – விஜய் சுளீர்!

 

விஜய் தனது உரையில், முதல்வர் ஸ்டாலினை கடுமையாகச் சாடினார். சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபோது, ‘இது தமிழக காவல்துறைக்கு அவமானம்’ என்று ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விமர்சித்தார். ஆனால், இப்போது அதே சிபிஐக்கு வழக்கை மாற்றி, பாஜகவின் பின்னால் ஒளிந்துகொள்வது ஏன் என்று காட்டமாக விமர்சித்தார். “நீதிமன்றம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு முதல்வர் சார்? வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, இப்போது ‘சாரி மா’ மாடல் அரசாக மாறிவிட்டது” என ஆவேசமாகப் பேசினார்.

 

தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றம்!

 

போராடி அனுமதி பெற்று நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தை, இன்னும் பெரியளவில், சிறப்பாகத் திட்டமிட்டு நடத்தி இருக்கலாம் என்று தவெகவினரே கூறுகின்றனர். மக்கள் மத்தியில், பனையூரை விட்டு விஜய் வெளியே வருவதில்லை என்ற விமர்சனங்களுக்கு பதிலடி தரும் அருமையான வாய்ப்பை விஜய் வீணடித்துவிட்டதாக அவர்கள் புலம்புகின்றனர். வெயில் நேரத்தில் ஆர்ப்பாட்டத்தைத் தேர்வு செய்தது, போதிய தண்ணீர் வசதியின்மை போன்ற காரணங்களால் 50-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் தடுப்புகள் சேதப்படுத்தியது, அக்கட்சிக்கு ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. அதைச் சரிசெய்து தருவதாக சென்னை மாநகராட்சிக்குக் கடிதம் எழுதும் நிலை ஏற்பட்டது. இது போன்ற நிகழ்வுகள், தவெகவின் இமேஜைக் கெடுக்கும் என கட்சி தொண்டர்களே உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

இந்த வேகம் போதுங்களா விஜய்?

 

திமுகவின் அதிகாரத்தைக் கொண்டு தவெகவின் வளர்ச்சியை ஒடுக்க நினைக்கிறதா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர். ஒரு அரசியல் கட்சி போராட்டம் நடத்துவதற்கும், அரசை விமர்சிப்பதற்கும் உரிமை உண்டு. கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற பெயரில், பேச்சின் ஒலியளவு போன்ற டூ-மச் நிபந்தனைகள் எல்லாம், ஆளுங்கட்சிக்கு மேலும் சறுக்கலை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய தடைக்கற்கள், தவெகவின் வளர்ச்சிக்கு படிக்கல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளதை திமுக உணர வேண்டும்.

 

அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், திமுகவின் தடைகளைக் கடந்து ஆர்ப்பாட்டம் நடத்தி, விஜய் ஓரளவு கவனத்தை ஈர்த்துள்ளார். முதல்முறையாகப் பொதுவெளிக்கு வந்த விஜய்யின் இந்த ஆர்ப்பாட்டம், ஒரு மாபெரும் சாதனை எனச் சொல்ல முடியாது என்றாலும், அது நிச்சயம் சறுக்கல் இல்லை. ஆனால், இன்னும் 8 மாதங்களில் தேர்தல் என்ற சூழலில் இந்த வேகம் எல்லாம் போதது என்பதை விஜய் உணர வேண்டும்.

Leave a Reply

Right Menu Icon