--- --:--:-- --

தானா சேர்ந்த கூட்டம்!? * வட மாவட்டங்களில் கிடைத்த எழுச்சி.. * எடப்பாடியார் முகத்தில் மகிழ்ச்சி!

download

சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க- அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசார களத்தில் குதித்துள்ளன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரப் பயணத்தை சூறாவளியாக மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து, தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படும் வட மாவட்டங்களில் தனது பிரசாரப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

 

நள்ளிரவில் பௌர்ணமி பூஜை!

 

விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி வாகனங்களில் வலம் வந்தார். குறிப்பாக, திண்டிவனத்தில் நடந்த ‘ரோடு ஷோ’வில், மக்களுடன் மக்களாகக் கலந்தார். பிறகு, நள்ளிரவு 11:30 மணியளவில், வானூர் அருகே உள்ள பழமையான வக்கரகாளியம்மன் கோயிலுக்குச் சென்று, பௌர்ணமி நாளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். இந்த கோவிலுக்குச் செல்பவர்களின் ஜாதகத்தில் உள்ள வக்கிர தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

 

‘குடும்ப ஆட்சி’ எனத் தாக்குதல்!

 

விழுப்புரத்தில் திரளாகக் கூடியிருந்த மக்களைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி உற்சாகமடைந்தார். பெண்களும் குழந்தைகளும் உற்சாகத்துடன் வரவேற்றது, பயணக் களைப்பை நீக்கியது. அதே நேரம், ஆளுங்கட்சியான தி.மு.க-வை விமர்சிக்கும்போது அவரது முகம் கடுமையாக மாறியது. தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி என்றும், 2026-ல் அ.தி.மு.க தலைமையில் அமையும் ஆட்சிதான் உண்மையான மக்கள் ஆட்சி என்றும் குறிப்பிட்டார்.

 

‘தி.மு.க-வினரிடம் ஏமாந்துவிடாதீர்கள்!’

 

“தி.மு.க-வினர் ‘ஒரணியில் தமிழ்நாடு’ என நோட்டீஸை தூக்கிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வருவார்கள். அவர்களை நம்பாதீர்கள். நான்கரை ஆண்டுகளாக உங்கள் குறைகளைப் போக்காத தி.மு.க-வினரா, தேர்தல் வரவிருக்கிற இந்த ஆறு மாதத்தில் போக்கிவிடுவார்கள்? அதனால் அவர்களை நம்பி ஏமாந்துவிட வேண்டாம்!” எனப் பேசியபோது, கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்தனர்.

“தி.மு.க-வினர் உங்கள் வீட்டுக்கு வந்து போன் நம்பரைக் கேட்டால், கொடுத்துவிடாதீர்கள். கொடுத்தீர்கள் என்றால், எல்லாம் போச்சு. நீங்கள் வெளியில் இருக்கிறீர்கள் என்று சொன்னால், வீடு புகுந்து இருப்பதை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள்!” என்று எடப்பாடி சொன்னபோது, கூட்டத்தில் விசில் சத்தம் பறந்தது.

அறநிலையத்துறை சர்ச்சைக்கு பதிலடி!

 

அறநிலையத்துறை நிதி குறித்த தனது பேச்சிற்கு தி.மு.க-வினர் விமர்சனம் செய்து கொண்டிருந்த நிலையில், அதற்கும் எடப்பாடி பதிலடி கொடுத்தார். “அறநிலையத்துறை நிதியை கல்லூரிக்கு பயன்படுத்தினால், விரிவாக்கத்திற்கு உடனடியாக நிதி கிடைக்காது. எனவே, அரசே நேரடியாகக் கல்லூரி தொடங்க வேண்டும் என்றுதான் நான் சொன்னேன்” என விளக்கமளித்தார்.

 

முதல்வர் ஸ்டாலினின் தந்தையான கருணாநிதிக்கு கடலில் சிலை வைக்கவும், மகன் உதயநிதி கார் ரேஸ் நடத்தவும் பணம் இருக்கிறது; ஆனால், புதிய கல்லூரிகளைத் தொடங்க அரசு கஜானாவில் பணம் இல்லையா? என எடப்பாடி கேள்வி எழுப்பினார். அ.தி.மு.க ஆட்சி அமைந்தால், அனைத்துப் பெண்களுக்கும் ரூ. 1,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் அளித்தார்.

 

உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம்!

 

பயணத்தின்போது கரும்பு, பலாப்பழ விவசாயிகளை சந்தித்தார். நெய்வேலி பிரசாரத்தில், என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு, முந்திரித் தொழிலாளர்களுக்கு இயந்திரம் போன்ற உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசியது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

 

அ.தி.மு.க-வின் கோட்டையான கொங்கு மண்டலத்தைவிட, தி.மு.க பலம் பெற்ற வட மாவட்டங்களில் மக்கள் கொடுத்த எழுச்சியைக் கண்டு எடப்பாடி பழனிசாமி உற்சாகத்தில் உள்ளார். “காசு கொடுத்துக் கூட்டி வந்த கூட்டம் அல்ல இது; உங்களைப் பார்க்க மக்களாகவே தன்னெழுச்சியாக வந்துள்ளனர்” என நிர்வாகிகள் கூற, எடப்பாடி மகிழ்ச்சியடைந்தார்.

 

முதல் கட்ட பயணம் எதிர்பார்த்ததைவிட எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கை தந்துள்ளது. அதே உற்சாகத்தில் தான் இரண்டாம் கட்ட பயணத்தையும் அவர் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய சுற்றுப்பயணம், அ.தி.மு.க.வின் அரசியல் செயல்பாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கவும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு அடித்தளத்தை அமைக்கவும் உதவும் என்று இலைக் கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon