--- --:--:-- --
8

குடும்பத்தையும், உறவுகளையும் பிரிந்து நெடுந்தூரத்தில் இருந்து பிழைப்புக்காக வந்த தொழிலாளிகள் இருவருக்கிடையே பெண் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. கொடூரமான கொலையில் முடிந்துள்ளது இந்த மோதல்.

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காட்டுக்கொல்லை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகே ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜஹான்தா கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கும்மிடிப்பூண்டி போலீசார் ஜஹான்தா சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பின்னர் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தை போலீசார் ஆய்வு செய்தனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி அதே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் இருந்து குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கூலித் தொழிலாளியாக தமிழகத்திற்கு வந்த ஜஹான்தா கொலை செய்யப்பட்டது ஏன்? அவரை கொலை செய்தது யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கொலை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்தபோது குற்றவாளி குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த மற்றொரு கட்டிட தொழிலாளி பண்டு பெகாரா என்பவர் கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஒடிசா சென்ற தனிப்படை போலீசார் அவரை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.

 

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலைக்கான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜஹான்தாவும் பண்டு பெகாரவும் கும்மிடிப்பூண்டி பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர். இருவரும் அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ஒன்றாக தங்கி இருந்துள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவருடன் இருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் நண்பர்களாக இருந்த இருவரும் எதிரிகளாக மாறியுள்ளனர். அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்தான் காட்டுக்கொல்லை பகுதியில் மது அருந்த சென்ற ஜஹான்தாவை பண்டு பெகாராவை விரட்டி சென்று கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.

 

இதையடுத்து கைது செய்யப்பட்ட பண்டு பெகாரா போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஜஹான்தா சில நாட்களுக்கு முன்புதான் ஒடிசா மாநிலத்திற்கு சென்று அங்கு தமது மனைவி மற்றும் மகளை பார்த்து விட்டு திரும்பியுள்ளார். மீண்டும் தமிழகத்திற்கு வந்த சில நாட்களிலேயே தகாத உறவு தகராறில் சக தொழிலாளி கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon